இந்த தீபாவளியில் ட்யூட், பைசன், டீசல் ஆகிய படங்கள் வெளகயாகி இருந்தது. அதில் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தை திரையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
படத்தை பார்த்த பின்பு சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் படித்தேன். பலரும் மிகவும் ஆரோக்கியமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழர்களும் பைசன் படம் குறித்த நேர்மறையான கருத்துக்களை வழங்கியிருந்தமையை கண்டேன்.
படம் பார்த்துக்கொண்டு இருந்த போது என் மனதில் ஒரே பெயர் வந்தது,அந்த பெயர் தான் முத்தையா முரளிதரன்.
முத்தையா முரளிதரன் தான் பைசன் எனவும்
அவரது களம் இலங்கை போன்றது என்ற எண்ணம் வந்தது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நடந்த சாதி மோதல்களையும், இலங்கையின் இன மோதல்களையும் நேரடியாகவோ சமமாகவோ ஒப்பிட முடியாது. ஆனால் இரண்டிலும் சில பொதுவான உணர்வுகள் இருக்கின்றன — தனிமை, அந்நியப்படுத்தல், அடையாளத்துக்கான போராட்டம், அங்கீகாரம் தேடும் துன்பம். இந்த உணர்வுகள் வழியே, முரளிதரனின் வாழ்க்கையையும் பைசன் நாயகனின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு உணர முடிகிறது.
படத்தின் சில தருணங்கள் முரளிதரனின் வாழ்க்கையை நினைவூட்டின:
1. தன் இனக்குழுவினரிடமிருந்தே எதிர்ப்பு மற்றும் குற்றச்சாட்டுகள்.
2. பிற இனத்தவரால் “அந்நியன்” என்று காணப்படுதல்.
3. வெற்றி பெறுவதற்காக மற்றவர்களை விட பல மடங்கு பாடுபட வேண்டிய நிலை.
4. இறுதியில் தன் திறமை மற்றும் உழைப்பே தன் ஒரே அடையாளம் என்பதை உணர்தல்.
பல ஆண்டுகளுக்கு முன் முத்தையா முரளிதரனிடம் “நீங்கள் யார்?” என்று கேட்ட ஒரு நேர்காணலை நான் பார்த்திருந்தேன். அதற்கு அவர் எளிதாக,
“நான் ஒரு கிரிக்கெட் வீரன்”
என்று பதிலளித்தார்.
அந்த ஒரு வரி அப்போது எனக்கு வழங்கிய உணர்வுக்கும் இப்போதைய உணர்வுக்கும் பல வேறுபாடுகளை உணர்கிறேன்.
அதாவது பைசன் அல்லது முரளிதரனது சிந்தனை என்பது இன அடையாளத்தை மறுப்பது அல்ல; மாறாக, தனது மனித அடையாளம் விளையாட்டு வழியாகவே உருவானது என்பதைச் சொல்வது.
ஆனால் அவரின் வாழ்நாளில் பலர் அவரை விமர்சித்தனர். சிலர் அவரை “இனத்துரோகி” என்றும் குற்றம் சாட்டினர். அந்தக் காலத்தில் நானும் அதே மனநிலையிலேயே இருந்தேன் — அவரை ஒரு “இன அடையாளத்தின் கோணத்தில்” பார்த்தவன் தான். ஆனால் காலம் போக, அனுபவங்களும் பைசன் போன்ற படங்களும் எனக்கு புதிய புரிதலைக் கொடுத்தன.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ஒரு கிரிக்கெட் கதையல்ல. அது சமூகத்தின் முன்மதிப்புகளுக்கு எதிரான ஒரு அடையாளப் போராட்டம். தன் இனத்தவரிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் வந்த அழுத்தங்களையும் சந்தேகங்களையும் தாண்டி, அவர் தன் உழைப்பால் உலக மேடையில் தன்னை நிரூபித்தார். அவர் வென்றது போட்டிகளையே அல்ல — தன் இருப்புக்கான உரிமையையும்.
பைசன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உண்மை சம்பவத்தைச் சொல்கிறது. ஆனால் அதன் உணர்வு, அதன் குரல், உலகளாவிய மனிதப் போராட்டங்களுடன் இணைகிறது — ஒதுக்கப்பட்டோரின் குரல், மரியாதைக்கான போராட்டம், மற்றும் தன்னம்பிக்கையின் வெற்றி.
அந்த அர்த்தத்தில், பைசன் நாயகனும் முத்தையா முரளிதரனும் ஒரே கதை சொல்கின்றனர் — வேறு சூழல், வேறு மேடை, ஆனால் ஒரே மனவலிமை.
இதில் மிக வருந்தத்தக்க விடயம் என்ன என்றால் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு கிரிக்கெட் வீரனின் கதையை , தமிழர் பெருமை என்ற பெயரில் திரைப்படமாக்க கூட நாம் அல்லது நமது சமூகம் அனுமதிக்காதது வருந்த தக்கது..
உலகம் அவரை கொண்டாடும் போது, நாமே அவரை மறுத்தது நம் சமூகத்தின் ஒரு அவமானமான பக்கம் ஆகவே நான் தனிப்பட்ட ரீதியில் கருதுகிறேன்
Ravinathan Rajeevan
Comments
Post a Comment