நானே இருந்தேன்
நானே என்னை பெற்று எடுத்தேன்
பிறந்தேன்
வளர்த்தும் வளர்ந்தும் கொண்டேன்
ஓடினேன் விரட்டினேன்
படித்தேன் படிப்பித்தேன்
அருட்டினேன் அருண்டேன்
மிரட்டினேன் மிரண்டேன்
காதலித்தேன் காதலிக்கப்பட்டேன்
எதிரியாய்
நானே தேடி வந்து
எதிர்த்து நிற்க என்னை நானே
கூர்மையாக்கினேன்
கூர்வழியே கொலை செய்யப்பட்டேன்
கொன்றேன்
காதறும் சப்தத்தின் வழி
நாகரீகமாகவும்
நடத்தையின்றியும் கற்பழிக்கப்பட்டேன்
கற்பழித்தேன்
அமானுச முறைகளில் நூதனமாய் களவு செய்தேன்
களவாடப்பட்டேன்
ஆயுத பேரிகைகளில் பசி ஆற்றிக்கொள்ளும் வழி தேடினேன் பலியானேன்
தகா மூட நம்பிக்கைகளை பரப்பிவிட்டேன்,பரவசமானேன்
பணத்தின் வழி மோகம் கொண்டு
பதுங்கி குழிகள் வெட்டினேன்
குழிக்குள் விழுந்தேன்
முதுகின் வழி நின்று சமயம் பார்த்து வாரிவிட்டேன்
ஓலமிட்டு அழுதேன்
என்னோடு நட்பு பக்கங்களை பரிந்துரை செய்து என்னை நானே
ஏமாற்றினேன்
ஏமாந்தேன்
காட்டியும் கூட்டியும் கொடுத்து
கயமத்தனம் செய்தேன்
கரைந்து போனேன்
இரையாகவும்
இரைகெளவியாகவும் இருக்கும் என்னை பார்த்து
நான் கோபம் கொண்டேன்
பாவம் கொண்டேன்
கண்ணீர் கொண்டேன்
ஆறுதல் சென்னேன்
எதிர்த்து நின்றேன்-தோற்றேன் வென்றேன்
வென்றேன் தோற்றேன்
கை கட்டி வேடிக்கை பார்த்தேன்
புகைப்படம் பிடித்தேன்
அதை காட்டி விருப்புகளை பெற்றேன்
உலக அரங்கில் விருதுகள் வாங்கினேன்
கதையில் எல்லாம் செய்து கொண்டிருக்கும் என்னை நானே பார்த்தேன்
என்னை நானே வாசித்தேன்
என்னை நானே வியந்தேன்
என்னை நானே வெறுத்தேன்
என்னை நானே காதலித்தேன்
என்னை நானே ஆமோதித்தேன்
முடிவுப்பக்கங்களை நோக்கி மும்முரமாக பாய்ந்தேன்
அது காலியாயிருந்தது
என்னை எழுதியவன்
முடிவை என்னிடமே விட்டான் போலும்
குழம்பினேன்!!!
கடைசியில்
கதை முடிந்ததாய் நினைத்து புத்தகம் மூடினேன்
ஆனால்
புத்தகம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது
Rajeevan Ravinathan

Comments
Post a Comment